ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள், சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் ரூ. 42 கோடி செலவில் நடத்த திட்டமிட்டது. இந்த போட்டிகள் கடந்த ஆண்டு டிச. 9, 10 தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை சாலைகளில் கார் பந்தயம் நடத்தப்படுதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படு கார் பந்தயம் இது என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்பதாகவும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுக்க கட்டாயப்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் பான் கார்டுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,”ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், தி.மு.க தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய தி.மு.க, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), எஃப்4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இந்த எஃப்4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் உதயநிதியின் கனவுத் திட்டமாகும். கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே ரூ.40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும், உதயநிதியின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், ரூ. 25,000 முதல் ரூ. 1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.
ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும்.
இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல. இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்.
பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, தி.மு.க அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும். தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் உதயநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“