தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட X பதிவில், "ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமோக வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்.
செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, தமிழ்நாடு சர்வதேச சர்ப் ஓபன் 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா ஆகியவற்றை வெற்றியாய் நடத்தி முடித்து, தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது.
உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் சாத்தியமான முதலீடுகளுடன் தமிழ்நாடு இந்தியாவில் விளையாட்டு துறை எதிர்காலத்திற்கு முன்னோடியாக இருக்கிறோம். அதனால் தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
இனியும் வரம்புகளை உயர்த்தி, இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவோம்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“