விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் கோவிட் -19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் தவறுதாலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் தவறுதலாக டிஸ்சார்ஜ் ஸ்லிப் கொடுக்கப்பட்டதால், இவர்கள் நால்வரும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர். பின்பு, தவறை உணர்ந்த மருத்தவமனை அதிகாரிகள், உடனடியாக விழுப்புரம் காவல்துறையிடம் விஷயத்தை கொண்டு சென்றிருக்கின்றனர். நோயாளிகளில் மூன்று பேர் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை கண்டறிந்தாலும், டெல்லியைச் சேர்ந்த அந்த நோயாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், வேலை தொடர்பான நேர்காணலில் கலந்து கொள்வதற்காக டிசம்பரில் புதுச்சேரிக்கு வந்தவர்.தற்செயலாக, அவர் விபத்து தொடர்பான வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மார்ச் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், பொது முடக்கம் காரணமாக டெல்லிக்கு செல்ல முடியாமல் இருந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இதுபோன்ற சம்பவத்தை மாநில சுகாதார அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர் . மாநில சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், "விழுப்புரத்தில் உள்ள கோவிட்- 19 நோயாளிகள் அனைவருமே அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருக்கின்றனர். சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறுவது தவறு. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இதுபோன்ற பிழை நடந்திருக்க முடியாது," என்று தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் பி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்,"நான்கு கோவிட் -19 நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனை ஊழியர்களால் தவறுதலாக டிஸ்சார்ஜ் ஸ்லிப்புகள் வழங்கப்பட்டன, அதில் நாங்கள் மூன்று பேரைக் கண்டுபிடித்து விட்டோம், டெல்லியைச் சேர்ந்த நான்காவது நோயாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், கோவிட்-19 நோயாளியைக் கண்டுபிடிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சிசி,திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil