உலகம் முழுவதும் நேற்று (ஜனவரி 1) 2023 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. மக்கள் சுற்றுலா தலங்கள், ஹோட்டல்களில் குவிந்து புத்தாண்டு கொண்டாடினர். நள்ளிரவில் கேக் வெட்டி, நடனமாடி உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.
பல்வேறு மாநில சுற்றுலா தலங்களிலும் மக்கள் அதிகளவில் குவிந்து புத்தாண்டு கொண்டினர். மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு நாளை தொடங்கிய வேளையில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த கார்-அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் இருக்கும் அங்கோலா தாலுகாவிற்கு உள்பட்ட பலேகுலி பகுதியில் நேற்று இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் அருண்பாண்டியன், நிபுல், முகமது பிலால் மற்றும் சேகரன் என அடையாளம் காணப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு கோகர்ணா பகுதி வழியாக ஊர் திருப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் வேகமாக சாலையின் தடுப்பு மீது மோதி பின்னர் அவ்வழியாக வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது எனத் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/