கோவை மாவட்டத்தில், சிறுத்தை தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் பகுதியில் தங்கம் என்பவர் தோட்டம் அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். நேற்று (பிப் 27) இரவு இவரது தோட்டத்திற்குள் சிறுத்தை புகுந்து ஆடுகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் 4 ஆடுகள் உயிரிழந்தன. இதேபோல், 6 மாடுகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, அப்பகுதியில் வனத்துறையினரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா இயங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதன்பேரில், மாற்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என வனத்துறையினர் உறுதியளித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று ஆடுகளை தாக்கியதாகவும், சிறுத்தை தாக்கியதில் தான் ஆடுகள் உயிரிழந்ததா என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தை நடமாட்டம் இருக்கும்பட்சத்தில் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.