சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களின் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் விமான நிலையத்திற்கு வருகைத்தரும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனையில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அச்சமயத்தில், துபாய் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களில் இருந்து வந்த விமானங்களில் பயணம் செய்த இரண்டு பயணிகள் சந்தேகத்திற்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர். இதனால் அவர்களை விசாரித்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் கொண்டுவந்த உடமைகளை சோதனை செய்தனர்.
தங்களின் உடமைகளுடன் கொண்டுவந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளையும் லேப்டாப்களையும் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் கடத்தி வந்தவர்களிடம் இருந்து ரூ.52,76,000 மதிப்புள்ள 1 கிலோ 57 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, துபாயில் இருந்து வந்த மற்றொரு இரண்டு பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது, அவர்கள் இரண்டு பேரும் தங்களது உள்ளாடைக்குள் ரூ.79,27,000 மதிப்புள்ள 1 கிலோ 710 கிராம் தங்கத்தை ஒளித்துவைத்திருந்தது தெரியவந்தது. இதனால் கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதுவரை சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் விளைவாக, நான்கு பேரிடமிருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 767 கிராம் தங்கம், வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அனுமதியில்லாத பொருட்களை கடத்திய நான்கு நபர்களை சுங்கத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil