திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ( நவ.11) பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அருகே சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. செட்டியப்பனூர் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தடுப்புச் சுவற்றை உடைத்து சென்றது. அச்சமயம் மறுபுறம் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 2 பேருந்துகளில் பயணித்த 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்பு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அரசு பேருந்து ஓட்டுநர் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த ஏழுமலை, தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநர் நதிம், சென்னையை சேர்ந்த கிருத்திகா உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
விபத்து நடந்த இடத்தில் வாணியம்பாடி எம்.எல்.ஏ செந்தில் குமார், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“