மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு புதன்கிழமை அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் விமான நிலையம் கட்டப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் உடான் (உள்நாட்டு விமானப்போக்குவரத்து திட்டம்) கீழ் இந்த ஆண்டு விமான நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சேலம் விமான நிலையத்திற்கு ஏற்கனவே ரூ. 35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 15.97 கோடியை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பல்வேறு முக்கிய வசதிகளை விமான நிலையத்தில் உருவாக்க செலவிட்டுள்ளது. மேலும் வேலூர், நெய்வேலி, தஞ்சை ஆகிய இடங்களில் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். பல கட்ட முயற்சியில் 5 விமான நிலையங்கள் கட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சேலத்தில் விமான நிலையம் கட்ட ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெய்வேலிக்கு ரூ. 30 கோடியும், வேலூருக்கு ரூ. 44 கோடியும், ராமநாதபுரத்திற்கு 36.72 கோடியும், தஞ்சைக்கு ரூ. 50.59 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேரடி விமான போக்குவரத்து வசதிகளை உருவாக்க ஏ.ஏ.ஐ. ரூ.11.81 கோடியை நெய்வேலியிலும், ரூ.34.87 கோடியை வேலூரிலும், சேலத்தில் ரூ.15.97 கோடியையும் செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
”சென்னையில் இருந்து சேலத்திற்கு வர மக்கள் விமான போக்குவரத்தினை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலூர் என்ற பட்சத்தில் போட்டியாக சாலை போக்குவரத்து அமைந்துள்ளது. நெய்வேலி மற்றும் வேலூர் செயல்பாட்டிற்கு தயாராக உள்ளது ஆனால் ஏர்லைன்கள் இந்த நிலையங்களில் இயங்குவதை ஊக்குவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். நெய்வேலி புதுவைக்கு அருகிலும், வேலூர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 4 மணிநேர தூரத்திலும் அமைந்துள்ளது என்பதாலும் இந்த விமான நிலையங்களை தேர்வு செய்வதில் சிக்கல்கள் உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். தஞ்சையில் ஏற்கனவே விமானப்படைக்கான வசதி உள்ளது. பயணிகள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதற்கான பணிகள் ஆயத்தமாகி வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
37 வான்வழி போக்குவரத்தை மூன்று கட்ட ஏலத்திற்கு பிறகு தமிழகத்திற்கு ஏ.ஏ.ஐ. வழங்கியது. அதில் 12 வான்வழிகள் விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி விமான நிலையமே பெரிய அளவிற்கு லாபம் ஈட்டவில்லை. வேலூர் மற்றும் நெய்வேலிக்கு யார் விமான பயணத்தை தேர்வு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil