பல்லடம் அருகே வீட்டின் அருகே மது அருந்தியவர்களைத் தட்டிக் கேட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பாதுகாப்பு காரணமாக, பல்லடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) இரவு வீட்டு வாசல் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும், அப்போது, வெங்கடேசன் உடன் மது அருந்த வந்து இரண்டு பேரிடமும் இங்கே மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
தங்கள் வீட்டு அருகே மது அருந்தக் வந்தவர்களை செந்தில்குமார் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் செந்தில்குமார், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (செப்டம்பர் 4) பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சாலை பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.
மேலும், கொலை செய்த 3 பேர்களையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை நடைபெற்ற மருத்துவமனையின் முன் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பல்லடம் அருகே கள்ளக்கிணறு 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அந்த பகுதிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்லடம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதனிடையே, அப்போது போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிம், 4 பேர் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய கொலையாளியான வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார், மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.
வீட்டு அருகே மது அருந்த வந்தததால் எதிர்ப்பு தெரிவித்ததால் 4 பேர் கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கொலையான 4 பேரின் உடல்களை வாங்க மறுத்து அவர்களுடைய உறவினர்கள் இன்று (செப்டம்பர் 4) மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலை மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருவதால், பல்லடம் அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் உடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.