நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு வனச்சரகம், தேனாடுகம்பை பிரிவு – ஒன்னதளை காவல் பகுதிக்கு உட்பட்ட அரக்காடு பகுதியில், பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, குழந்தையை வனவிலங்கு ஒன்று தாக்கி இழுத்து சென்றதை பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நிஷாந்த் என்பவரின் மகள் சரிதா(4) சுயநினைவின்றி கழுத்தில் இரத்த காயத்துடன் இருந்துள்ளார். வனத்துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ததில், சிறுத்தையின் கால் தடம் இருப்பதை கண்டுள்ளனர். சிறுமியை சிறுத்தை தாக்கி இருக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும் சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றதாக அவருடைய தாயார் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை சுற்றி வனவிலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்தி பி. ரஹ்மான், கோவை