மதுரை அருகே இரசாயனம் கலந்த கழிவுநீரை பருகிய மாடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தர்மர், அசோக், அய்யனார் மற்றும் பெருமாள் உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான 920 மாடுகள், பெருங்குடி அடுத்த மண்டேலா நகர் பகுதி அருகே அறுவடை முடிந்த விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்டுருந்தன.
இந்த மாடுகள் அப்பகுதியில் சென்ற இரசாயனம் கலந்த கழிவுநீரை பருகியுள்ளன. இதனால், 14 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து கால் நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சுப்பையன், உதவி இயக்குநர் சரவணன், நோய்கள் புலனாய்வு பிரிவு மருத்துவர் கிரிஜா, அவனியாபுரம் கால்நடை மருத்துவர் பாபு உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதில், உயிரிழந்த மாடுகளின் சடலங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அருகே இருந்த நிலத்தில் புதைக்கப்பட்டன, மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 70 மாடுகளை மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, வி.ஏ.ஓ கணேசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.