ஹைதராபாத்தில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, எழும்பூரில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், திராவிடர்கள், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக, தெலுங்கு மக்கள் மற்றும் அமைப்பினரிடம் இருந்து கடும் எதிர்வினையாற்றப்பட்டது.
இதையடுத்து தனது உரைக்கு, நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் நடிகை கஸ்தூரி தலைமறைவானார்.
இதனிடையே, மதுரை திருநகர் நாயுடு மாகாஜன சங்கம் தாக்கல் செய்த புகாரின் பேரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமின் வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கஸ்தூரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார். அதன்பேரில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காண்பித்தனர். குறிப்பாக, தலைமறைவான நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், நடிகை கஸ்தூரியை நேற்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
அதன்பேரில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, கஸ்தூரிக்கு வரும் 29-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது புழல் சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“