தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, லோசனை கூட்டமானது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று(அக்.21) நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தீபாவளியையொட்டி வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு 14,016 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்பபட உள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கப்படும்.
நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வண்டலூரில் அரசு பேருந்துகளை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 3 நாட்களில் சுமார் 5.83 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்படும். 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் . மக்கள் கூடுதல் கட்டணம் குறித்து 18004256151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
வரும் 24-ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை, பேச்சுவார்த்தை நடத்தப்படும். போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை. தீபாவளி பயணத்திற்கு இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தீபாவளியின்போது மக்கள் வசதிக்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்தத்திற்கு எடுத்து அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் இயக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“