காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை ரூ.1,792 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஃபாக்ஸ்கான் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபோன்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் வருங்காலத்தில் ஐபேட்களையும் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு பிற்பகுதி முதல் இந்தப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் ப்ரீமியம் வகை மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரூ.1,792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.2,601 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை மூலம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், புதிய முதலீடு, ஆலை விரிவாக்கம் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு, கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“