ஃபிரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகளெல்லாம் வருகிறது. இவை குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில், பிஏ ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் எனது மகள் கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது மகள் பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவர் பழக்கமாகி உள்ளார். அவர்தான் எனது மகளை கடத்திருக்க வேண்டும். எனவே எனது மகளை மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில், செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மகளை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் நீதிபதிகள் அதற்கு அனுமதி வழங்கினர்.
மேலும் விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் உள்ளனர். தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையங்களில் அந்த விளையாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. ஃபிரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகளெல்லாம் வருகிறது. இவை குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுகிறது.
சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“