வ.உ.சிதம்பரம் பிறந்தநாள் : இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாக இன்றும் கருதப்படுபவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வ.உ. சிதம்பரனார். கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் இன்றும் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஆளுமை மிகுந்த இந்த தியாகியை அவரின் பிறந்த நாளில் நினைவு கூறுவோம்.
தமிழக அரசு சார்பில் இந்நாளை சிறப்பிக்கும் பொருட்டு தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நாள் பிறந்தார் சிதம்பரம்.
தந்தைக்கு நிகரான வழக்கறிஞர் வ.உ.சிதம்பரம்
சிதம்பரம் அவர்களின் தகப்பனார் ஒரு வழக்கறிஞர். தன்னுடைய தகப்பனார் உலகநாதன் பிள்ளை போல் தானும் ஒரு நல்ல வழக்கறிஞராக பணியாற்ற விரும்பினார். அதற்காக படிக்க ஆரம்பித்தார் வ.உ.சி. ஒட்டப்பிடாரத்திலும், திருநெல்வேலியிலும் தன்னுடைய பள்ளிப் படிப்பினை முடித்தார்.
பள்ளி படிப்பு முடிந்த பிறகு வேலைக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்த சட்டப் படிப்பினை மேற்கொண்டார். தந்தைக்கு நிகரான வழக்கறிஞராக ஆனால் அவரின் கொள்கைகளுக்கு எதிர்மறையாக ஏழைகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் வாதாடுவதை வழக்கமாகக் கொண்டார் வ.உ.சி
காங்கிரஸ் கட்சி உறுப்பினராக சிதம்பரம் பிள்ளை
1905ம் ஆண்டு சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தேசிய அளவில் தலைவர்களாக, சுதந்திரப் போராட்டங்களுக்கு வழி நடத்துபவர்களாக இருந்த லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரின் சுதேசி இயக்கத்தில் அதிமாக ஈர்க்கப்பட்டவர் வ.உ.சி.
சுதேசப் பொருட்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அனைவரும் சுதேச இயக்கங்களுக்கு ஆதரவாக போராடத் தொடங்கினார்கள். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி சார்பிலான போராட்டங்களுக்கு தலைமை வகித்தார் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன்
வழக்கறிஞராக பணியாற்றி பின்பு சுதேசி இயக்கங்களில் போராடி வந்தவர் வ.உ.சிதம்பரனார். சுதேசி கப்பல் போக்குவரத்து அக்காலத்தில் இந்தியாவில் எங்கும் இல்லை. அச்சமயத்தில் 1906ம் ஆண்டு உள்ளூர் வணிகர்களின் உதவியுடன் இரண்டு புதிய கப்பல்களை வாங்கி கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டார். அதனாலே அவரின் பெயர் கப்பலோட்டிய தமிழன் என்று நிலை பெற்றது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதன் விளைவாக 1908ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.
இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் பெற, அவரின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. சிறை வாசம் மேற்கொண்ட போது செக்கிழுக்கும் வேலைகள் செய்து வந்தார். விடுதலையான பின்பு தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
வ.உ.சி பாரதியுடன் அதிக அளவு அன்பும் மரியாதையும் நட்பும் கொண்டிருந்தார். வ.உ.சி அடிக்கடி பாரதியின் கவிதை வரிகளை சொல்லிக் கொண்டே இருப்பார்.