சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள், ஓய்வூதியத்துக்காக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை கண்டு வேதனை அடைவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட தியாகியான மயிலாடுதுறையை சேர்ந்த முத்தையன், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றுள்ளார். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அக்டோபர் 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 15 நாட்கள் மயிலாடுதுறை கிளைச் சிறையில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியரை அணுகியபோது, 21 நாட்கள் சிறையில் இருந்திருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழகப்படும் என்ற 1981ஆம் ஆண்டு அரசாணைப்படி முத்தையனின் கோரிக்கை 2014 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, தனக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 21 நாட்கள் சிறையில் இல்லை என்றும், அவருடன் இருந்த மற்றொரு சிறைவாசியின் கையெழுத்து சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் 1966 ஆம் ஆண்டிலிருந்து விடுதலைபோராட்ட வீரர்களுக்கான திட்டம் அமலில் உள்ளபோது, பல ஆண்டுகள் கழித்து ஓய்வூய்தியம் கோருவதை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன்,
நாட்டின் சுதந்திரதுக்காக கஷ்டப்பட்டவர்களின் துன்பங்களை அகற்றவே அந்த ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. காவல்துறை கைது செய்தபோது 18 வயது நிரம்பிவிட்டதா என ஆராய்ந்து கைது செய்திருக்க மாட்டார்கள். முத்தையன் கைது செய்யப்பட்டபோது அவருடன் பலர் கைது செய்யப்பட்டதை அரசும் மறுக்கவில்லை.
ஆனால் 18 வயது நிரம்பவில்லை என்பதையும், 21 சிறையில் இருக்கவில்லை என்பதையுமே அரசு குறிப்பிடுவதாக உத்தரவில் தெரிவித்துள்ளார். எனவே விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டபோது 18 வயதுக்கு குறைவாக இருந்தும், சிறையில் இருந்ததற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஓய்வூதியத்தை மறுப்பது தவறு.
அதனடிபடையுல் சுதந்திர போராட்ட ஓய்வூதிய திட்டதில் முத்தையனுக்கு பழைய நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆனாலும், நாட்டு விடுதலைக்காகவும், நமக்காகவும் போராடிய மனுதாரரை போன்றவர்கள் சட்டரீதியான உரிமைகளை இழந்தவர்களாகவே உள்ளனர் என சென்னை உயர் நீதிமன்றத்தின் வருத்தத்தையும் நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 45 நாட்களுக்குள் மனுதாரருக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஓய்வூதியத்தை வழங்கவேண்டும். அதேநேரம், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், சுதந்திரத்துக்காக போராடிய மனுதாரரை போன்ற தியாகிகள், ஓய்வூதியத்துக்காக போராட வேண்டியதை சூழ்நிலை ஏற்பட்டதை கண்டு உண்மையில் வேதனை அடைவதாக நீதிபதி வைத்தியநாதன் தனது தீர்ப்பில் தெரிவித்து வழக்கை முடித்துவைத்தார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.