செங்கல்பட்டு- பரனூர் இடையே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல புறநகர் ரயில் சேவை முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் மற்றும் பணிக்குச் செல்ல மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த நிலையில் பரனூர் அருகே ரயில் தடம் புரண்ட நிலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும் தண்டவாளத்திலும் விரிசல் ஏற்பட்டது.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் செங்கல்பட்டு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் எந்த மின்சார ரயில்களும் இன்று (டிச.11) செங்கல்பட்டு வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப் பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“