தமிழ்நாட்டில் உள்ள சிவன் ஆலயங்களில் மிகவும் புகழ்பெற்றது திருவண்ணாமலை. உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. இதனை காண தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
மேலும், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் ஆன்மீக சுற்றுலா பயணமாக திருவண்ணாமலைக்கு வந்து மாதக்கணக்கில் இங்கு தங்கி தியானம் செய்கிறார்கள். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். முழுமையாக தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
அருணாச்சல மலைகளில் தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என்று 40 வயது மதிக்கத்தக்க சுற்றுலாப் பயணியை நம்ப வைத்து உள்ளூர் டூரிஸ் கைடு தவறாக வழிநடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி மாதம் கோயில் நகரத்திற்கு வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த அந்தப் பெண், பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் புனித யாத்திரைத் தலங்களுக்குச் சென்றபோது வெங்கடேசனை சந்தித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை, வனத்துறையால் பராமரிக்கப்படும் மலையின் தடைசெய்யப்பட்ட பகுதியை தியானத்திற்கு ஏற்ற இடம் என்று கூறி அழைத்துச் சென்று அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரிடம் இருந்து தப்பித்து கூச்சலிட்டபடி கீழே வந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் வருவதை பார்த்த அந்த நபர் தப்பியோடிவிட்டார்
இதுகுறித்து அந்தப் பெண் சென்னையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தின் அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இது குறித்து புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்ணை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட அப்பெண் தன்னிடம் அத்துமீறிய சுற்றுலா வழிகாட்டியின் அடையாளங்களை காண்பித்தார். அதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.