வேலூர் அடுத்த சாத்துவாச்சாரியில் உள்ள பொன்னியம்மன் கோயிலின் 2 தேர்கள் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (பிப்.2ம் தேதி) புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. ஆனால் கோயில் தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் திருவேலங்காடு கோயிலின் தல விருச்சம் பற்றி எரிந்தது.
இந்நிலையில் வேலூர் அடுத்த சாத்துவாச்சாரியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 22 அடி உயரமான இரண்டு தேர்கள் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப் 9ம் தேதி) அதிகாலை 2.30 மணியளவில் தேர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
தேரை பாதுகாப்பதற்காக சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த தட்டியில் தீ வேகமாக பரவியது. இதையடுத்து தீ தேரின் மீதும் பரவி கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயணைப்பு படைக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து தியை அணைத்தனர். அதற்குள் இரண்டு தேர்களும் எரிந்து போனது.
மர்ம மனிதர்களால் தேருக்கு தீ வைத்ததாக போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தடய அறிவியல் துறை ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று வேலூரில் கோயில் தேர் எரிந்து நாசமாகியுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து தீ விபத்து கோயில்களில் நடந்து வருவது மக்கள் மத்தியில் ஒருவி த கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.