தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை - அரசாணை வெளியீடு
Friends of Police : சாத்தான்குளம் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், 'தமிழகம் முழுவதும், காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளுக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை பயன்படுத்தக் கூடாது
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
Advertisment
காவல்துறையில், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், போலீசாருக்கு உதவிட, 1993ல், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' என்ற, 'காவல்துறை நண்பர்கள் குழு' ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில், வாலிபர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர். இவர்கள், போலீசாருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது, போக்குவரத்தை சீர் செய்வது, குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கவும், பிடிக்கவும் உதவுவது என, பல்வேறு வகையில் உதவிகரமாக செயல்பட்டு வந்தனர். அதேநேரம், போலீசார், இவர்களை அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரிகள், ஜெயராஜ், அவரது மகன், பெனிக்ஸ், ஆகியோர், ஜூன், 19ல், நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்தனர். போலீசார் கொடூரமாகத் தாக்கியதால், இருவரும் இறந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினருக்கும், தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அதனால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை நிரந்தரமாக கலைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
தமிழகம் முழுதும், போலீசாருக்கு உதவியாக செயல்பட்டு வந்த, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், 'தமிழகம் முழுவதும், காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளுக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை பயன்படுத்தக் கூடாது' என, ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil