தமிழகத்தில் விஏஓ முதல் முதல்வர் வரையில் 24 துறைகளின் ஊழல் புகார்களை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கவர்னரிடம் கொடுத்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தெரிவித்ததாக, அவர் நிருபர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் விஏஓ முதல் முதல் அமைச்சர் வரையில் 24 துறைகள் மீதான புகார் மனுவை, ராஜ்பவனில் கவர்னர் வன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் மலிந்துவிட்டது. விஏஓ முதல் முதல் அமைச்சர் வரையில் ஊழல் நடந்துள்ளது. 24 துறைகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் சொல்லியுள்ளார்.
இப்போது மட்டுமல்ல. திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. 2003ம் ஆண்டு முதல் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். முதலில் விசாரிக்கப்பட வேண்டியது மணல் கொள்ளை. அடுத்தது தாது மணல். இதில் மட்டும் 2002 முதல் 2012க்குள் தமிழகத்தில் 44 லடசம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆஷிஸ் குமார் என்ற கலெக்டர் ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்தார். 2 நாளில் அவரை மாற்றிவிட்டனர். ககந்திப் சிங் பேடி, முதல் அறிக்கை கொடுத்தார். இரண்டாவது அறிக்கையை கொடுத்தால் வாங்க மாட்டேன் என்கிறார்கள்.
கிராணைட் 1லட்சத்து 10 ஆயிரம் கோடி முறைகேடு நடத்துள்ளதாக சகாயம் அறிக்கை சொல்கிறது. தமிழக அரசு எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்கிறது. குட்கா ஊழல். இது பற்றி பல முறை சொல்லியுள்ளேன். சுகாதாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடக்குது. காப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் செய்கிறார்கள். உயர் கல்வித்துறையில் துணை வேந்தர் நியமனம் செய்ய வேண்டும் என்றால், 10 முதல் 30 கோடி ரூபாய் கையூட்டு கொடுக்க வேண்டும். அசிஸ்டெண்ட் புரபசருக்கு 30 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும். ஒவ்வொரு பல்கலைகழகத்தில் நூறு கோடிக்கு மேல் கார்பஸ் பண்ட் இருந்தது. ஆனால் இன்றைக்கு அது சில கோடிகளாக குறைந்துள்ளது. அண்ணா பல்கலை கழகத்தில் அறுநூறு கோடி இருந்த கார்பஸ் பண்ட், 16 கோடியாகியுள்ளது. பாரதிதாசன் பல்கலை கழகத்தில் பார்த்தால் 54 ஆயிரம்தான் இருக்கிறது.
வெட்னரி காலேஜில் இன்னும் மோசம். மின் துறையில் மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது. அரசு அனல் மின் நிலையங்கள் ஏன் அடிக்கடி பழுதாகிறது. வேண்டுமென்றே பழுது செய்யப்படுகிறது. தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக இப்படி செய்கிறார்கள்.
இதையெல்லாம் விளக்கமாக கவர்னரிடம் புகாராக கொடுத்துள்ளோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியுள்ளார்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டியில் கூறினார்.