தமிழகத்தில் தடுப்பூசிகள் “கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது” என்றும், இதனால் மாநிலத்தில் தடுப்பூசி திட்டம் “நிறுத்தக்கூடிய” நிலையில் உள்ளதாகவும், எனவே ஜூன் மாத முதல் வாரத்திலிருந்தே தடுப்பூசி விநியோகத்தை விரைந்து வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாகவும், இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதால், தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளித்து, ஜூன் மாத முதல் வாரத்திலிருந்தே தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் 1 தேதியிட்ட இந்த கடிதத்தை அரசாங்கம் புதன்கிழமை வெளியிட்டது. மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை நீக்குவதற்கும், கொரோனா தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழகம் அதன் மக்கள்தொகை அளவு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையின் விகிதாசார அளவிற்கேற்ப தடுப்பூசி அளவுகளை பெறவில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார்.
எனவே, மத்திய அரசு தொகுப்பின் கீழ் வழங்கப்படும் 50 லட்சம் டோஸ் மட்டுமல்லாமல் மற்ற தொகுப்பிலிருந்தும் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்தால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும், என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். சமீபத்திய ஒதுக்கீட்டின் கீழ், மத்திய அரசு தொகுப்பின் கீழ் மாநிலத்திற்கு 25.84 லட்சம் டோஸும், மற்ற தொகுப்பிலிருந்து 16.74 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு தேசிய அளவிலான பாதிப்புகளுடன் தொடர்புடையது, இருப்பினும், முந்தைய குறைந்த ஒதுக்கீட்டை சரிசெய்ய சிறப்பு ஒதுக்கீடு செய்வதற்கான எங்கள் கோரிக்கையை மத்திய அரசு கவனிக்க வேண்டும்," என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை (ஐவிசி) செயல்படுத்த தமிழகத்திற்கு அனுமதி வழங்கவும், ஏற்கனவே இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளதையும், மீண்டும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, ஆலை உடனடியாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னர் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார். "நாங்கள் ஆலை தொடர்பாக ஏற்கனவே வைத்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், தருணத்தின் அவசரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக தடுப்பூசிகளின் உற்பத்தியைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை, உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்."
"ஆலையை செயல்படுத்துவதற்கு தனியார் கூட்டாளரைக் கண்டுபிடிப்பது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசா என்பதைப் பொருட்படுத்தாமல், மேலும் தாமதம் ஏற்படாமல் ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று ஸ்டாலின் கூறினார்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil