தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 40க்கு 40 வெற்றியை பெற்று தந்ததற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து நம்முடைய இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்.
திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகைக்காக 1 கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1 லட்சத்து 18 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம் வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என பரபரப்பாக செய்திகள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கோரிக்கை வலுத்திருக்கிறது ஆனால் பழுக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“