/tamil-ie/media/media_files/uploads/2017/04/a5.jpg)
கண்ணன்
கரூர் பகுதியில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வருகிற ஏப்ரல் 28 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார். கரூரைச் சேர்ந்த குச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா, ரூ.300 கோடி நிதி ஒதுக்கியதாகவும் ஆனால் அதற்கான பணி இன்னும் தொடங்காமல் இருப்பதற்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்தான் காரணம் என்று அவர்களை எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர். அவர் போராட்டம் நடத்தப்போவது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரையும் மாநில அமைச்சரையும் எதிர்த்து!.
ஏப்ரல் 28 அன்று செந்தில் பாலாஜி இருக்கப் போகும் உண்ணாநிலைப் போராட்டத்தை எதிர்த்து அதே இடத்தில் மற்றொரு உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருக்கிறது. அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வாங்கியிருப்பவர் கரூர் பகுதி அதிமுகவின் செயலர் நெடுஞ்செழியன்!
/tamil-ie/media/media_files/uploads/2017/04/jayalalithaa759.jpg)
வரலாறு காணாத குழப்பங்கள்
டிசம்பர் 5, 2016 அன்று ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து, தமிழகத்தின் ஆளும் கட்சியும் மாநிலத்தின் மிகப் பெரிய கட்சியும், இந்திய நாடாளுமன்றத்தின், மூன்றாவது பெரிய கட்சியுமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் ஆட்டம் கண்டிருக்கிறது. முதலமைச்சர்கள் மாறியிருக்கிறார்கள். பொதுச் செயலாளர்கள் மாறியிருக்கிறார்கள். பல்வேறு குழப்பங்கள், கேலிக்கூத்துக்களுக்கு மத்தியில் கட்சி பிளவுபட்டு நிற்கிறது. கட்சியின் பெயரும் தேர்தல் சின்னமும் முடக்கப்பட்டிருக்கின்றன. நிழல் அதிகார மையமாக இருந்துவந்த சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் . ஆட்சி நடக்கிறதா, கட்சி அமைப்பு என்ற ஏதேனும் இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுமளவுக்குக் குழப்பம் சூழ்ந்துள்ளது. சிதறுண்ட கட்சியை ஒன்றாக இணைக்கும் முயற்சிகள் ஒருவழியாக அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. இரு தரப்பினருக்கும் இடையே கட்சி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
சசிகலா மற்றும அவரது குடும்பத்தினர் முற்றிலும் கட்சியை விட்டு ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ் தரப்பின் முதன்மை நிபந்தனையாக உள்ளது. மாற்றுத் தரப்பினரும் இதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இரு குழுக்களும் இணைந்தால் யார் முதல்வர், யார் பொதுச் செயலாளர் என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண்பது எளிதாக இருக்கப்போவதில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2017/04/panneerselvam-sasikala-759.jpg)
இணைவது சாத்தியம்தானா?
சசிகலாவின் தலைமையையும் கட்சியில் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தையும் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அறவே வெறுக்கின்றனர். ஆனால் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் நீக்கிவிட்டால் அதிமுகவின் எதிர்காலம் வளமாக அமைந்துவிடும், கட்சியும் ஆட்சியும் நிலைத்து நிற்கும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. ஏற்கனவே கட்சிகளின் இரண்டு தரப்புகளையும் சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் வெவ்வேறு கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர். எனவே இரண்டு பிரிவுகளும் இணைந்துவிட்டாலும் புதுப் பிரிவுகள் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இரண்டு காரணங்கள் இந்த அச்சத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளன. ஒன்று அதிமுக எப்போதுமே ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது. கட்சியைத் தொடங்கிய எம்ஜிஆர் காலத்திலும் அவருக்குப் பிறகு வந்த ஜெயலலிதா காலத்திலும் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் பிடிக்குள் ஒட்டுமொத்த கட்சியும் கட்டுண்டுஇருந்தது. ஜெயலலிதா மறைவிக்குப் பின் அந்த இடத்தை நிரப்ப சசிகலா மற்றும் தினகரன் முயற்சித்தனர். அந்த முயற்சிகளுக்கு இப்போதைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. சசிகலா அளவுக்கு மோசமாக வெறுக்கப்படவில்லை என்றாலும் அதிமுகவில் இருக்கும் வேறெந்தத் தலைவருக்கும் ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கும் நன்மதிப்பும் இல்லை. சசிகலா தரப்பை எதிர்த்து வெளியேறிய சில நாட்களில் ஓபிஎஸ்க்கு மக்கள் மதிப்பும் செல்வாக்கும் வானளவு உயர்ந்தது. ஆனால் அவர் மீண்டும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களிடம் சேரும் நிலைக்கு வந்திருப்பதும் அவர் மத்தியில் ஆளும் பாஜகவினால் இயக்கப்படுகிறார் என்று வலுத்துவரும் சந்தேகமும் அவரது செல்வாக்கைக் குறைத்துள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2017/04/jaya-apollo-759.jpg)
பாஜகவின் பங்கு என்ன?
தமிழக அரசியலில் நடக்கும் களேபரங்களில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருக்கிறது என்பதாகவே பாஜக கட்சியினரையும், ஆதரவாளர்களையும் தவிர மற்ற அனைவரும் சந்தேகப்படுகிறார்கள். நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல்களை வென்று ஆட்சியமைத்துள்ள பாஜகவுக்கு, தமிழகத்தில் மட்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லை. திமுகவும் அதிமுகவும் பலம் பொருந்திய கட்சிகளாக இருக்கும்வரை பாஜகவால் இங்கு காலூன்ற முடியாது என்பதே கடந்த காலத் தேர்தல் வரலாறு சொல்லும் உண்மை.எனவே ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பலமிழப்பது பாஜகவுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்னும் கணக்கைப் புறந்தள்ளுவதற்கில்லை.
ஆனால் கட்சியின் வருங்காலம் குறித்த சந்தேகம் வலுத்திருந்தாலும் இத்தகைய சூழல் அதிமுகவுக்கான முடிவுரையின் தொடக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இணைப்புக்குப் பின் பன்னிர்செல்வமும் பழனிசாமியும் அதிமுகவின் வலு மிகுந்த தலைவர்களாக உருவெடுத்து மக்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முடிந்தால் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்படும். சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை ஒதுக்கிவைப்பது எத்தனை கடினமான செயல் என்றாலும் அதைச் செய்ய வேண்டும். கட்சிக்குள் ஓங்கும் எதிர்ப்புக் குரல்களைக் கையாள்வதில் தங்கள் ‘அம்மா’ இடமிருந்து சில பாடங்களைக் கற்க வேண்டும். அதோடு அதிமுகவில் எப்போதுமே இருந்திராத உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால் மீதமிருக்கும் நான்காண்டு ஆட்சியை நல்லபடியாகப் பூர்த்திசெய்யலாம்.
இதையெல்லாம் நிறைவேற்றுவது மிகக் கடினம்தான். ஆனால் மன உறுதியும் நேர்மையும் மக்கள் மீதான அக்கறையும் மிக்க தலைவர்களால் சாத்தியமாகக் கூடியவைதான்.அத்தகைய தலைவர்களாக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் உருவாவது அவர்களது கைகளில்தான் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us