தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் பிரதமர்மோடியை புதன்கிழமை சந்தித்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜகவுடன் தமாகா இணையும் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில் சிறிதும் உண்மை இல்லை என்று கூறினார்.
கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக – பாஜக கூட்டணியை தொடர்ந்து ஆதரித்து வந்தார்.
அண்மையில், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்னை வந்தபோது ஜி.கே.வாசன் நேரில் சென்று பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து, பாஜகவை ஆதரித்துவந்த ஜி.கே.வாசனை பிரதமர் மோடி சந்திப்பதாக கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிந்த பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்து தமாக தலைவர் ஜி.கே.வாசன், பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று டெல்லி சென்று பிரதமர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணி நேரம் பிரதமருடன் உரையாடினார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முக்கிய கட்சியாக அங்கம் வகித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தேசிய அளவில் பாஜக கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்று, நாட்டை மிகச் சிறப்பாக வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சி தலைவர் என்ற வகையில் முதல்முறையாக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, தமிழகத்தில் வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எடுத்துக் கூறினேன். அதில் குறிப்பாக கல்வி, விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து பேசினேன். நான் பேசியதை கவனித்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி அதில் சில சந்தேகங்களை கேட்டார். அதற்கு விளக்கம் அளித்தேன். தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறினேன்.
இதையடுத்து, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் பற்றியும் எனது கணிப்பையும் பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். தமிழகத்தில் மக்களின் மனநிலை மாற்றம் கண்டிருக்கிறது. இதனால்தான், இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது வருங்காலத்திற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீதும், பாஜக மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அமைக்கும் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவரை இந்தமுறை சந்திக்க நேரம் கேட்கவில்லை. அடுத்தமுறை நிச்சயம் சந்திப்பேன். பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையும் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில் சிறிதும் உண்மையில்லை. எங்கள் கட்சி தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்” என்று கூறினார்.