ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், “தற்போதைய அரசியல் களச் சூழலில் அதிமுக போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா காலமானதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜ் மீண்டும் களமிறக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், அதிமுக போட்டியிட ஜி.கே. வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழக மக்களின் வருங்கால நலன், கூட்டணி, தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இது பொதுத்தேர்தல் அல்ல, இடைத்தேர்தல் என்பதாலும், கடந்த கால இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அதிமுக தொடர்பான கேள்விக்கு, “தற்போதைய சூழலில் மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். ஆகவே எங்களது கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்” என்றார்.
கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் களம் கண்ட 58396 வாக்குகள் பெற்றார். மறைந்த தமிழ் மகன் ஈவேரா 8904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/