scorecardresearch

ஜூனியர் விகடன் இயக்குனர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை: சென்னை போலீஸ் கமிஷனர் புதிய விளக்கம்

ஜூனியர் விகடன் இயக்குனர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. ஆனால், அந்நிறுவனத்தில் பணிபுரியும் சிலருடன் பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஜூனியர் விகடன் இயக்குனர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை: சென்னை போலீஸ் கமிஷனர் புதிய விளக்கம்

சென்னையை சேர்ந்த ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை ரூ50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கெவின் என்ற நபரை காவல்துறை கைதுசெய்திருப்பதோடு, ஜூனியர் விகடன் இதழின் இயக்குனர்கள், யூடியூபர்களான சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில், ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் இருந்து ஜூனியர் விகடன் இயக்குனர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை எஃப்ஐஆரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ‘ஜி ஸ்கொயர்’ தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அந்நிறுவன அலுவலர் புருஷோத்தம் குமார் கடந்த மே 21 2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கெவின் என்பவர், ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா (எ) ராமஜெயம் குறித்தும் ஜூனியர் விகடன் இதழில் அவதூறு செய்தி வெளியிடப்படும் என்றும், சமூக ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டி, பணம் கேட்பதாகத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து, முதல் குற்றவாளி கெவினை கடந்த மே 22 அன்று கைது செய்தனர். அந்நபரிடம் முதற்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது.

கைதான கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதேபோன்று, அந்த பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எனினும், எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குனர்கள் உள்ளிட்ட சிலர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி அவர்களின் பெயர்களை எஃப்ஐஆரில் இருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: G square case no evidence against junior vikatan directors says shankar jiwal