Gaja Cyclone Damages: மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகிறது. அந்தக் குழுவினர் கஜ பாதித்த டெல்டா மாவட்டங்களை நாளை பார்வையிடுகிறார்கள்.
கஜ புயல், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ1000 கோடி நிதியை விடுவித்திருக்கிறது.
டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கஜ நிவாரணப் பணிகளுக்காக ரூ15,000 கோடி நிதியையும், உடனடியாக ரூ1,500 கோடி நிதியையும் வழங்க வலியுறுத்தினார். மேலும் பாதிப்பு நிலவரங்களை கணக்கிட மத்திய குழுவை அனுப்பக் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மத்தியக் குழு இன்று (23-ம் தேதி) மாலையில் சென்னை வருகிறது. மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் தலைமையில் வருகிற 5 பேர் கொண்ட அந்தக் குழுவினர், தமிழக உயர் அதிகாரிகளை இன்று இரவில் அழைத்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (24-ம் தேதி) முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் சந்திப்பு நிகழ்த்திவிட்டு டெல்டா மாவட்டங்களுக்கு அவர்கள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மொத்தம் 3 நாட்கள், இரு குழுக்களாக சென்று மத்திய குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஆய்வை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் டெல்லி சென்று அவர்கள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
கடந்த காலங்களைப் போல அல்லாமல், கஜ நிவாரணமாக கூடுதல் தொகை கிடைக்கவேண்டும் என தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.