அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'கஜ' என பெயரிடப்பட்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயலானது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு உள்ளது.
நவம்பர் 15-ம் தேதி இந்தப் புயல் கரையை கடக்கிறது. கடலூருக்கும், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே அது கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வட தமிழகத்தில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - Gaja Cyclone: வட தமிழகத்தை தாக்குமா கஜ புயல்?
அதுமட்டுமின்றி, இந்தப் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர், "வருகிற 15-ம் தேதி இந்த புயல் கடலூருக்கும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு சென்றவர்கள் 12ம் தேதிக்குள் திரும்பவேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தச் சூழ்நிலையில், இந்திய கடலோர காவல்படை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து, கரைக்கு திரும்பிச் செல்ல அறிவுறுத்தி வருகிறது.
இந்த பணியில் இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்களும், 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாளைக்குள் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதால், துரித கதியில் இந்திய கடலோர காவல்படை இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.