கஜா புயல் நிவாரண நிதியாக, 14,910 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். உடனடி நிவாரணமாக 1,431 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரியுள்ளார்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை நேரடி கள ஆய்வு செய்யும் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், புயல் நிவாரண தொகை குறித்து பதிவொன்றை செய்துள்ளார்.
அதில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக டெல்லிக்குப்போன எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியாக 15,000 கோடியும், இடைக்கால நிவாரணமாக 1,500 கோடியும் கேட்டிருக்கிறார். இது போதுமானதல்ல.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சேத மதிப்பே 25,000 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். இதை மனதில் வைத்து இடைக்கால நிவாரணமாக 5,000 கோடியையாவது கேட்டிருக்க வேண்டும்!" என்று காட்டமாக கூறியுள்ளார்.
முன்னதாக, தனது ஐந்து ஏக்கர் தென்னை மரங்களும் புயலில் சாய்ந்துவிட்டதால் மனம் வெந்து தற்கொலை செய்து கொண்ட ஒரத்தநாடு சோழன்குடிகாட்டைச் சேர்ந்த சுந்தர்ராஜனின் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் ஆறுதல் அளித்தார்.