TN CM Edappadi K Palaniswami Delhi visit: கஜ புயல் நிவாரண உதவிகளை கேட்க முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார் அவர்.
கஜ புயல், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியிருக்கிறது. மாநில அரசு இதற்கான நிவாரணப் பணிகளுக்கு ரூ 1000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. எனினும் இந்த நிதி போதாது.
கஜ புயல் நிவாரணப் பணிகள் குறித்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 20-ம் தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அடுத்தக்கட்டமாக நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசின் உதவிகளைப் பெறுவதில் அரசு மும்முரமாக இருக்கிறது.
கஜ சேத மதிப்புகளை உயர் அதிகாரிகள் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும். இதற்காக இன்று (நவம்பர் 21) மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு கிளம்புகிறார்.
இன்று இரவு டெல்லியில் தமிழ்நாடு விருந்தினர் இல்லத்தில் தங்கும் முதல்வர், நாளை (நவம்பர் 22) காலை 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். அப்போது கஜ புயல் சேதம் குறித்த அரசு அறிக்கையை சமர்ப்பித்து, சில ஆயிரம் கோடிகளை நிவாரணமாக கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு தனது குழுவை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்தக் குழுவில் அறிக்கையைப் பொறுத்தே கஜ நிவாரணத் தொகையாக எவ்வளவு வழங்குவது? என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.
அதற்கு முன்னதாக மாநிலங்களுக்கான பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஒரு தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.