விநாயகர் சதுர்த்தி தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், விநாயகர் சிலை வைக்கும் அமைப்பினர் காவல் ஆணையரகம் உள்ள இடங்களில் உதவி காவல் ஆணையாளரிடமும் மற்ற இடங்களில் சார் ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியரிடமும் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசு புறம்போக்கு இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நெடுஞ்சாலை துறை ஆகிய அலுவலர்களிடம் இருந்து தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும் என்றார். மேலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும் எனவும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது மாற்றாக பெட்டி வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.
தீயணைப்பு அலுவலரிடம் இருந்து அமைக்கப்பட்டுள்ள சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதிகளை கொண்டுள்ளது என்பதற்கான சான்று பெற்று இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு சிலைகளை அமைக்க கூடாது என தெரிவித்தார்.
மேலும் பந்தல் அருகே தற்காலிக முதலுதவி மற்றும் அவசர கால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தளங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்த்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நான்கு சக்கர வாகனங்கள் மினி லாரி மற்றும் டிராக்டர் ஆகியவற்றில் சிலைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் மாட்டு வண்டி மீன் வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாகனத்தில் பயணம் செய்யும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மோட்டார் வாகன சட்டம் 1988 க்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிபொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வருவாய் அலுவலர் சர்மிளா பொள்ளாச்சி சார் ஆட்சியர் மாநகர காவல் துணை ஆணையாளர் என பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.