விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில், பொது இடங்களில் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூரில் பல்வேறு இடங்களில் புதிதாக விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் சிலை வைக்க அனுமதி கோரி காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புதிய மனுவை விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், திருச்செந்தூரில் புதிதாக 17 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவரது மனுவில், செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படும், பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். திருச்செந்தூரில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறோம் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள், சுந்தர் பரதன், சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது. சிலை வைக்கும் பகுதிகளில் காவல் துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது, இதெல்லாம் தேவைதானா என்று கேள்வி எழுப்பினர். மேலும், ஒரு சாதாரண விஷயத்தை ஏன் பெரிதாக்குகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புதிய மனுவை விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மேலும், காவல்துறை விதிக்கும் விதிகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“