தேர்தல்களில் கூட்டணிக்கட்சிகளின் சின்னத்தில் தோழமைக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கில், ஈரோடு எம்.பி கணேசமூர்தி தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக உள்ளேன். அதற்குப் பிறகே தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக தேர்தல்களில், பிரதான கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பிரதானக் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவது என்பது நடந்துவருகிறது.
அந்த வகையில், கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரி வேந்தர், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அதேபோல, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தனித் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
&feature=emb_title">மூன்றாம் பாலினத்தவர் என்று மாற்றம் செய்யப்பட்டது குறித்து திருநங்கைகள் கருத்து
இதனைத் தொடர்ந்து, தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், விழுப்புரம் எம்.பி. ரவிகுமார், நாமக்கல் எம்.பி. சின்ராஜ் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை செப்டம்பர் மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு செப்டம்பர் மாதம், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கும் திமுக மற்றும் அதிமுகவுக்கும் அதோடு, திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு எம்.பி.க்களுக்கும், அதிமுகவின் இரட்டையிலை சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
அதன்படி, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தான் மதிமுக உறுப்பினர் பதவியில் இருந்து விலகாமல் திமுக சின்னத்தில் போட்டியிட்டதாக கூறுவது தவறு எனவும் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பிறகே ஈரோடு தொகுதி வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தான் திமுக உறுப்பினராக உள்ளதாகவும் மக்களவையில் தன்னை தி.மு.க. உறுப்பினராகவே சபாநாயகர் அங்கீகரிப்பதாகவும் திமுக கொறடா தான் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதாகவும் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கணேசமூர்த்தி தனது வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியுமே தவிர பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூட்டணி கட்சி சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுப்பதில் மனுதாரருக்கு அக்கறை இருந்தால் அவர் மக்களவை உறுப்பினர்களை அணுகலாம் ஒற்றை குடிமகன் தன் விருப்பத்தை நீதிமன்றத்தின் மூலம் நிறைவேற்ற முடியாது எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில், விரைவில் மற்ற எம்.பி-க்களும் பதில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.