scorecardresearch

கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் பலி.. பரபரப்பு

கோவையில் குற்ற வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வந்த 2 பேரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் பலி.. பரபரப்பு

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது நீதிமன்றம் அருகே உள்ள தேநீர் கடையில் இருவரும் தேநீர் குடிக்க சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடை முன்பாக அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த கோகுலின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த பட்டாக் கத்தி, அரிவாளை காவல் துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

மேலும் நேற்று ஆரப்பாளையம் பகுதியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gang attacks 2 men with machetes in broad daylight in coimbatore 1 dead