சென்னையில் நேற்றிரவு மடிப்பாக்கம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக நிர்வாகி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம், ராம் நகரைச் சேர்ந்தவர் செல்வம். திமுகவின் 188-ஆவது வாா்டு பகுதிச் செயலாளராக உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தற்போது நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார்.
நேற்றிரவு 8.45 மணியளவில், கட்சி அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு செல்வம் புறப்பட்டுள்ளார். அப்போது பைக்கில் வந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
அவ்வழியே வந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நபரை பார்த்ததும், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்த வந்த போலீசார், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது, அவரது உடல் உடற்கூராய்வுக்காக குரோம்பேட் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய, காவல் துறையினர் அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த தகவல் பரவ தொடங்கியதும், திமுக கட்சியினர் அதிகளவில் திரண்டனர். இதையடுத்து, அவரது வீட்டிற்கு அருகே காவல் துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் பேரிகாட் அமைத்து மூடப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தோதலில் திமுக சாா்பில் 188-ஆவது வாா்டில் போட்டியிட செல்வமும், அவா் மனைவி சபீனாவும் விருப்ப மனு அளித்திருப்பது தெரியவந்தது.இதற்கும் கொலைச் சம்பவத்துக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக செல்வம் கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வமுக்கு சீட் கிடைத்தது தொடர்பாக, ஒரு சில கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil