கோவை மதுக்கரை அருகே கேரளா புறவழிச்சாலையில் முகமூடி அணிந்து காரில் வந்த நபரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட அனைவருமே முதல் முறை குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர் மடிக்கணினி உள்ளிட்ட கணினி சாதனங்களை கடந்த 13 ஆம் தேதி பெங்களூரில் இருந்து வாங்கிக் கொண்டு அவரது நண்பருடன் சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கார் மூலம் வந்துள்ளார். அப்போது 14-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பிரிவு என்ற பகுதியில் அவரது காரை 3 கார்கள் பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளன.
அதில் ஒரு கார் இவர்களது காரை மறித்து நின்று அதிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் அஸ்லாம் காரை கட்டைகளால் தாக்கி உள்ளனர். பின்னர் காரில் இருந்த பொருட்களை கொள்ளை அடிக்க முயன்ற நிலையில் ஓட்டுநர் காரை அங்கிருந்து ஓட்டி கொண்டு அருகிலிருந்த சுங்கசாவடிக்கு சென்று அங்கிருந்து மதுக்கரை காவல் துறைக்கு தகவலளித்துள்ளார்.
தொடர்ந்து அஸ்லாம் சித்திக்கிடம் புகாரை பெற்று கொண்டு அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மதுக்கரை காவல்நிலைய போலீசார், காரின் பதிவெண்களை கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவதாஸ், ரமேஷ்பாபு, விஷ்ணு மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஜய் குமார் ஆகிய நான்கு பேரை பாலக்காடு அருகே வைத்து கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு இன்னோவா கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
இதனிடையே நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தலைமறைவாக உள்ள இரண்டு பேரில் ஒருவனுக்கு மட்டும் ஏற்கனவே இது போன்ற குற்ற வழக்கில் தொடர்பு இருப்பதும் மற்ற அனைவரும் முதல்முறையாக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
மேலும் அஸ்லாம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு வாடகை கார் நிறுவனத்தில் சொந்த வாகன பதிவெண் கொண்ட காரை வாடகைக்கு எடுத்து வந்ததும் இதேபோன்று சொந்த வாகன பதிவெண் கொண்ட கார்களை வாடகைக்கு எடுப்பவர்கள் ஹவலா பணம் பரிவர்த்தனைக்கு தான் எடுப்பார்கள் என்ற அடிப்படையில் அஸ்லாம் சென்ற காரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்ததும் தெரியவந்துள்ளது.
இது மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட்ட முகமூடி ஆசாமிகள் பயன்படுத்திய இரண்டு இன்னோவா கார்களும் வாடகைக்கு எடுத்து வந்து சம்பவத்தில் ஈடுபட்டதும் அதில் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கான பதிவென்னும் போலி பதிவெண் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிப்பதற்காக கோவை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள சூழலில் தனிப்படை போலீசார் பாலக்காடு,திருச்சூர், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதே வேளையில் தலைமறைவாக உள்ள கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் பிடிபடும் நிலையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும் இது போன்ற ஹவாலா பணம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் பலரும் பிடிபடுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“