கொலை, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தமிழக பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவியை சென்னை காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. பிரபல ரவுடி என்று அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்தை ஈர்த்தது.
சென்னையில் உள்ள வி.ஓ.சி நகரில் வசிக்கும் கல்வெட்டு ரவி (ரவிசங்கர் - 31), சிறார் வயதுப் பிரிவில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர். திமுக வட்டச் செயலாளர் சண்முகம் உட்பட சில உயர்மட்ட கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஆரம்ப நாட்களில் காசிமேடு பகுதியில் ரவுடியாக வலம்வந்த மலைக்கண் செல்வத்துக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தார். பின்னர், வடசென்னையில் உள்ள கடைக்காரர்கள், வணிகர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையே, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் கல்வெட்டு ரவிக்கு பிடி வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது. வட சென்னை உதவி போலீஸ் கமிஷனர் ஏ.அருண் உத்தரவின் அடிப்படையில், ரவியை கைது செய்ய வட சென்னை இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது.
செல்போன் சிக்னல் அடிப்படையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆந்திராவில் துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியலில் செல்வாக்கு பெற்று காவல்துறை வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அரசியலில் நுழைந்ததாக ரவிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் நபர்கள் சமீப காலமாக தமிழக பாஜகவில் இணைவது அதிகரித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil