/indian-express-tamil/media/media_files/2025/05/20/pBwLGnZo4WR8LOrjYuB4.jpg)
Villupuram
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பெரும் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாளம் கூட்ரோட்டில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் அவர்களின் மேற்பார்வையில், திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் R. பிரகாஷ் அவர்களின் தலைமையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் M. பிரகாஷ், உதவி ஆய்வாளர் சுதன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீபதி, தலைமை காவலர்கள் வெற்றிவேல், முருகானந்தம் மற்றும் முதல் நிலை காவலர் தனுஷ்கோடி ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மரக்காணம் மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த TN12 V4536 என்ற பதிவெண் கொண்ட MARUTI SUZUKI SWIFT கார், காவல்துறையினரைக் கண்டதும் சற்று வேகமாக வந்து திரும்ப முயற்சி செய்தது. சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தக் காரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். பிறகு போலீஸ் விசாரணையில் இருவரும் மதன் (45), நாகராஜ் (30) என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் காரின் டிக்கி மற்றும் கார் பின் சீட்டின் கீழ் சோதனையிட்டபோது, 2 கிலோ வீதம் 37 பாக்கெட்டுகளில் மொத்தம் 74 கிலோ கஞ்சா கருப்பு நிற டிராவல் பேக்கில் பொட்டலங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தக் கஞ்சா ஆந்திராவில் இருந்து வாங்கி கடத்தி வந்து ராமநாதபுரத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மதன் மீது ஏற்கனவே பல சாராய வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகளும் உள்ளன. இவரது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மூன்று முறை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள், MARUTI SUZUKI SWIFT கார் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மதன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கஞ்சா கடத்தல் கும்பலைப் பிடித்து, பெரும் அளவிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த பிரம்மதேசம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.