அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். காய்கறி, இறைச்சி, மருந்துகள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், பூண்டு விலை உயர்ந்து காணப்படுவதால் திருமணத்திற்கு வருகை தந்திருந்த நண்பர்கள், பூண்டு மாலையை பரிசாக அளித்த சம்பவம் பூவிருந்தவல்லி அருகே அரங்கேறியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் மகன் லாரன்ஸ் கிருஸ்டினா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகையும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த மணமகனின் நண்பர்கள், பூண்டு மாலையை பரிசாக வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ. 100 முதல் ரூ. 125 விற்பனையாகும் நிலையில், தற்போது ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக பூண்டு மாலை பரிசாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சக்தி சரவணன் - சென்னை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“