நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இன்று காலை இவரது வீட்டுக்கு நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் என்பவர் சிலிண்டர் மாற்றுவதற்கு சென்றுள்ளார். அப்போது பார்த்தசாரதி வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் என்பவரது மனைவி தனலட்சுமி தனது வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு உள்ளது. அதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து தனலட்சுமி வீட்டுக்கு சென்ற அருண்குமார் அங்கு கேஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்து உள்ளது. தீ பரவியதில் தனலட்சுமி மற்றும் அருண்குமார் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், தீ பரவியதில் ஏற்பட்ட புகை பார்த்தசாரதி வீட்டிலும் பரவி உள்ளது. இதில் பார்த்தசாரதி மயக்கம் அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத்துறையினர் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி, கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் ஆகிய மூவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீக்காயம் அடைந்த அருண்குமாருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“