சென்னையில் தனியார் பள்ளியில் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் சுமார் 35 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், திடீரென வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3-வது தளத்தில் இருந்த மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.
இது குறித்து பள்ளி நிர்வாகம், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மயக்கம் அடைந்த 35 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் பள்ளியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, பள்ளியில் இருந்த மற்ற மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆய்வகத்தில் இருந்து காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வாயு வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளியில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டதில், 35 மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று ஆய்வு செய்தனர்.
அடுத்து, தேசிய மீட்புக் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு தற்போது வாயுக் கசிவு ஏதுமில்லை என தெரிவித்தனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு அக்டோபர் 26-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“