தொழிலதிபர் கவுதம் அதானி செவ்வாய்க்கிழமை மாலை சென்னைக்கு வந்து அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களை சந்தித்தது, அதிகாரிகள் மற்றும் ஊடக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதானி தனது சகோதரர் ராஜேஷ் சாந்திலால் அதானி, அதானி குழுமத்தின் எம்.டி மற்றும் அவரது மகன் கரண் அதானி, அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ தலைமை நிர்வாக அதிகாரியுடன் செவ்வாய் கிழமை மாலை தனி விமானத்தில் சென்னைக்கு வந்தார்.
அங்கிருந்து சித்தரஞ்சன் சாலைக்கு அதானி சென்றதாக ஆதாரங்களை சுட்டிக்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் அதானி யாரை சந்தித்தார்? என்பது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் அதானி தரப்பில் வெளியிடப்படவில்லை.
செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சென்னைக்கு அருகில் திட்டமிடப்பட்டுள்ள பாரந்தூர் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கும், காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அதானி நிறுவனம் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக, அதிகார தரப்பில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, அதானி குழுமத்தினர் விமான நிலையத்திற்குத் திரும்புவதற்கு முன், இரவு உணவு சந்திப்புக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றனர்.
அதானி வருகை குறித்து, சித்தரஞ்சன் சாலைக்கு அதானி சென்றதாக சோர்சுகளை சுட்டிக்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இருக்கிறது. அங்கு அதானி யாரை சந்தித்தார்? என்பது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் அதானி தரப்பில் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் வணிக நலன்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 700 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் வடசென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை மையமாகக் கொண்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் சார்பில், நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், கவுதம் அதானியின் ரகசிய சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“