மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரை பார்க்ககூட முடியாத ஜெ.தீபா குயீன் டிவி தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர எந்த உரிமையும் இல்லை என திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றனர்.
தன் அனுமதியில்லாமல் தயாரிக்கப்படும் தலைவி, ஜெயா, குயின் ஆகிய படங்கள் மற்றும் இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, ஜெ.தீபா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது .
அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், கொளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் தீபா வழக்கு தொடர்வதற்கு எந்த தகுதியும், உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என கூறும் ஜெ.தீபா, பலமுறை ஜெயலிதாவை தான் தொடர்பு கொண்டு பார்க்க நினைத்த போதும் அவரால் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஏற்கனவே தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக மனுத் தாக்கல் செய்துள்ளார். எனவே ஜே.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் இயக்குனர் விஜய் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.