Gayathri Raguram: நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் ‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் தமிழக மக்களுக்கு இன்னும் பரிச்சயமானார்.
பா.ஜ.க உறுப்பினராக இருந்து வந்த இவர், தேசிய அளவிலான இளைஞர் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார். இவருக்கும் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், தனக்கு அரசியலில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதாகவும், தற்போது பிரேக் எடுத்துக் கொண்டு வெளியில் இருந்து அனைத்தையும் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் காயத்ரி அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
”அரசியல் களம் தரம் தாழ்ந்து விட்டது. சின்னக் குழந்தைகளின் சண்டை போல் ஒருவரை குறை சொல்கிறார்கள். இங்கு முதிர்ச்சியான தலைவர்களே இல்லை. அதனால் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்காது.
இப்போது எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இறுதியில் நாம் ஜோக்கர்களாகிறோம். சினிமாவை விட அரசியலில் போதுமான அளவு நடிகர்கள் இருக்கிறார்கள். போலியான தலைவர்கள், போலி போராளிகள், போலி உறுப்பினர்கள் என எல்லாமே போலியாக உள்ளது. இதில் நானும் ஒருவராக இருக்க விரும்பவில்லை.
விஸ்வாசம் அர்ப்பணிப்பு என எதுவுமே இல்லை. வெறுப்பாளர்களும் முதுகில் குத்துபவர்களும் தான் இங்கு அதிகம். என்னால் 24 மணி நேரமும் நடிக்க முடியாது. இப்போதைக்கு வெளியில் இருந்து கற்றுக் கொள்ளவே விரும்புகிறேன். தேவையான போது அரசியலில் ஈடுபடுவேன். இப்போதைக்கு அதற்கு பிரேக் விடுகிறேன்” என இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் காயத்ரி.