பா.ஜ.க-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், வி.சி.க., தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தாலும் அந்த கட்சியில் சேர்ந்து செயல்படத் தயார் என்று கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் வி.சி.க-வில் இணைவது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் முரண்பட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க-வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், காயத்ரி ரகுராம், பா.ஜ.க-வில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார். திருச்சி சூர்யா, டெய்ஸி போன் உரையாடல் ஆடியோ, திருச்சி சூர்யா மீது அலிஷா அப்துல்லா குற்றச்சாட்டுகளால் மாநில பா.ஜ.க-வில் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடிகை காயத்ரி ரகுராம், “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பா.ஜ.க-வில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். பா.ஜ.க-வில் அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க-வின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் ” என்று அறிவித்தார்.
மேலும், பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், வி.சி.க, தி.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தால் அந்த கட்சியில் சேர்ந்து செயல்படத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
காயத்ரி ரகுராம் பா.ஜ.க-வில் இருந்து விலகியது குறித்து, வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்போதாவது ஞானம் வந்ததே என்று குறிப்பிட்டு வரவேற்றிருந்தார். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம். இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பா.ஜ.க” என்று குறிப்பிட்டுருந்தார்.
இதனிடையே, வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, “சனாதனிகள் யாரையும் விடுதலைச் சிறுத்தைகளில் இணைக்கமாட்டோம்!” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், வி.சி.க செய்தித் தொடர்பாளர் பாவலன், நடிகை காயத்ரி ரகுராம், வி.சி.க, தி.மு.க ஆகிய கட்சிகளில் சேரத் தயார் என்று கூறியது குறித்து, வன்னி அரசுவின் கருத்துக்கு முரண்பட்ட கருத்து தெரிவித்துள்ளார்.
வொயர் தமிழ் யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ள வி.சி.க செய்தித் தொடர்பாளர் பாவலன், காயத்ரி ரகுராம் வி.சி.க-வில் இணைவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன்தான் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயத்ரி ரகுராம்க்கு ஒரு ஜனநாயகப் பார்வை வந்துள்ளது. அதனால்தான், மற்ற எந்த கட்சிகளையும் விட முதலில் வி.சி.க பெயரைக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் காயத்ரி ரகுராம் திருமாவளவனை விமர்சனம் செய்தது குறித்து பேசிய பாவலன், தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு சென்றவர்கள் தி.மு.க-வில் இருந்தபோது அ.தி.மு.க தலைமையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அதே போல, அ.தி.மு.க-வில் இருந்தபோது .தி.மு.க தலைமையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். இது அரசியலில் சகஜமானது. ஆனால், காயத்ரி ரகுராம் வி.சி.க-வில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சித் தலைமை திருமாவளவந்தான் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.