Chennai News Highlights: அமெரிக்கா, எகிப்து அதிபர்கள் முன்னிலையில் கையெழுத்தானது காஸா அமைதி ஒப்பந்தம்

Tamil Nadu Latest News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
peace 2025

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு: இஸ்ரேல்–ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. “அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; கைதிகளை விடுவிக்க வேண்டும்” என டிரம்ப் கெடு விதித்திருந்தார். இதையடுத்து 3 நாட்களாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல்–ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகவுள்ளது. தற்போது காசா போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, தங்கள் வசம் இருந்த பணயக்கைதிகள் (20 பேர்) அனைவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட பணயகைதிகளுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • Oct 14, 2025 07:12 IST

    காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

    அமெரிக்கா, எகிப்து அதிபர்கள் முன்னிலையில் காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்ரேல் - காஸா இடையேயான போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  



  • Oct 13, 2025 19:38 IST

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன; எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகின்றன. தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன; அரசை மக்களே கலைத்துவிடுவார்கள்” என்று விமர்சனம் செய்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 13, 2025 18:38 IST

    பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசியர் தகுதித் தேர்வு

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணியில் இருக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு 2026ம் ஆண்டில் 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு டெட் தேர்வு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியது. 2026-ம் ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பரில் சிறப்பு டெட் தேர்வு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 2026ல் நடைபெறும் சிறப்பு டெட் தேர்வு முடிவுகளின் ஆய்வுக்குப் பின், 2027ம் ஆண்டில் தேவைக்கேற்ப டெட் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • Oct 13, 2025 18:26 IST

    இடைக்கால உத்தரவு மாறுதலுக்கு உட்பட்டதே - உச்ச நீதிமன்றம்

    தற்போதைய முகாம்திரங்களுக்கு ஏற்ப இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்த்தரப்பின் பிரமாணப் பத்திரங்களை அடுத்து, இந்த உத்தரவு மாறுதலுக்கு உட்பட்டதே என்பதைத் தெளிவுபடுத்துகிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் முழு விவரங்கள் வெளியாகின.



  • Oct 13, 2025 17:45 IST

    தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் ரத்து - உச்ச நீதிமன்றம்

    கரூர் துயரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ-யிடம் கரூர் போலீசார், விசாரணை ஆணையம் மற்றும் எஸ்.ஐ.டி. அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • Oct 13, 2025 17:27 IST

    எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி

    எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Oct 13, 2025 17:24 IST

    ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு

    இஸ்ரேல்–ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. “அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; கைதிகளை விடுவிக்க வேண்டும்” என டிரம்ப் கெடு விதித்திருந்தார். இதையடுத்து 3 நாட்களாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல்–ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகவுள்ளது. தற்போது காசா போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, தங்கள் வசம் இருந்த பணயக்கைதிகள் (20 பேர்) அனைவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயகைதிகளுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பணயக்கைதிகளாக இருந்தவர்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்ததால், அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



  • Oct 13, 2025 16:50 IST

    தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடியில் முதலீடுகளை செய்யும் பாக்ஸ்கான்

    தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி மதிப்பில் 14,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், புதிய முதலீடுகளைச் செய்ய இருப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஐ. அடிப்படையிலான செயல்பாடுகள், மேம்பட்ட உற்பத்தி, R&D (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) ஒருங்கிணைப்பு உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய இருப்பதாக, அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உறுதி அளித்துள்ளனர்.



  • Oct 13, 2025 16:36 IST

    விமானத்தில் பெண்ணுக்கு மூச்சு திணறல்: சென்னையில் தரையிறக்கம்

    சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து சுமார் 290 பயணிகளுடன் நேற்றிரவு மலேசியாவின் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பெண் பயணிக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசிப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டார். இதுபற்றி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தலைமை விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை தரையிறக்கி, அப்பெண் பயணிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை ஏற்பாடு செய்து அளிக்கும்படி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 4.45 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது. 



  • Oct 13, 2025 16:11 IST

    பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

    2025 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் பிலிப் அகியோன் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்தவர். ஏனைய இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

     



  • Oct 13, 2025 16:10 IST

    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.660 உயர்ந்து ரூ.92,640க்கு விற்பனை

    தங்கம் விலை இன்று பிற்பகலிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.440 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு பவுன் ரூ.640 உயர்ந்து ரூ.92,460க்கு விற்பனையாகி வருகிறது. இன்று காலை வெள்ளியின் விலை ஒரு கிலோக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2,000 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோக்கு ரூ.7,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,97,000க்கு விற்பனையாகிறது.

     

     



  • Oct 13, 2025 16:08 IST

    தமிழக மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். புஷ்பவனம் கிராமத்தில் இருந்து 5 படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 படகுகளில் இருந்த 21 மீனவர்களை தாக்கி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் பறிப்பு என புகார் தெரிவித்துள்ளனர்.



  • Oct 13, 2025 15:51 IST

    கோயில் பணியாளர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு

    சென்னையை அடுத்த திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பை மு.க.ஸ்டாலின் காணொலி வழியே திறந்து வைத்தார்



  • Oct 13, 2025 15:47 IST

    டிச.31 முதல் நெட் தேர்வு

    நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும். யுஜிசி நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA) தெரிவித்துள்ளது.

    யுஜிசி நெட் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை www.ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

     



  • Oct 13, 2025 15:45 IST

    தங்கம் விலை மீண்டும் உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ₹640 அதிகரித்து, ஒரு சவரன் ₹92,640க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ₹55 உயர்ந்து ₹11,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹197க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Oct 13, 2025 15:33 IST

    3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

    2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜாயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியைத் தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 13, 2025 15:33 IST

    ஏடிஎம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி பணமோசடி

    ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கான உரிமை பெற்றுத் தருவதாகக் கூறி, தங்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கோயம்புத்தூர் மாநகரக் காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

    "ஏ.டி.எம்-ல் மக்கள் பணம் எடுப்பதற்கு ஏற்ப, அதிக கமிஷன் ஈட்டலாம்" என்று (ZPE ATM) நிறுவனத்தின் சமூக வலைதள விளம்பரத்தை நம்பி, ஒவ்வொருவரும் சுமார் ₹2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.



  • Oct 13, 2025 15:28 IST

    மகளிர் இலவசப் பேருந்து சேவை விரிவாக்கம்

    கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 6 வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வழித்தட மகளிர் இலவசப் பயணப் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

    இதன்மூலம், 7 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,500 பேர் பயணடைய உள்ளனர்



  • Oct 13, 2025 15:07 IST

    லாலுவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்பு!

    ரயில்வே ஊழல் வழக்கில் ஆர்ஜேடி (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எதிராக சிபிஐ (CBI) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், ஐஆர்சிடிசி (IRCTC) ஹோட்டல் டெண்டர்களில் லாலு பிரசாத் யாதவ் மோசடி செய்ததாக சிபிஐ குற்றம் சுமத்தியிருந்தது.



  • Oct 13, 2025 15:06 IST

    உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

    சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில், போலீசாரால் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உயர் நீதிமன்றம் அமைத்த ஒருநபர் ஆணையத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     



  • Oct 13, 2025 14:36 IST

    விடை பெற்றது தென்மேற்குப் பருவமழை

    கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், சிக்கிம், மகாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இன்று (அக்டோபர் 13) தென்மேற்குப் பருவமழை விலகியது.

    வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 13, 2025 14:34 IST

    11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு

    நடப்பு கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், 2030 ஆம் ஆண்டு வரை தேர்வுகளை எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

     



  • Oct 13, 2025 14:21 IST

    ட்ரம்ப்புக்கு உயரிய விருதுகளை அறிவித்த இஸ்ரேல் மற்றும் எகிப்து!

    காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் தங்கள் நாடுகளின் உயரிய விருதுகளை வழங்க உள்ளதாக இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகள் அறிவித்துள்ளன.

    இஸ்ரேலின் - 'Presidential Medal of Honour' (ஜனாதிபதியின் மரியாதைக்குரிய பதக்கம்)

    எகிப்தின் - 'Order of the Nile' (நைல் நதியின் விருது)

    ஆகிய விருதுகளை டிரம்ப் பெற உள்ளார்.



  • Oct 13, 2025 14:18 IST

    சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாகச் சரிசெய்க: அமைச்சர் எ.வ.வேலு

    "வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்ய முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.



  • Oct 13, 2025 14:06 IST

    திட்டப் பணிகளை திறந்து வைத்த ஸ்டாலின்

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை சார்பில் ரூ.7.46 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். 

    மேலும் ரூ.16.30 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்



  • Oct 13, 2025 13:59 IST

    வாக்கு திருட்டு: பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை (PIL) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

     

     

     

     



  • Oct 13, 2025 13:37 IST

    முல்லைப் பெரியாறு அணை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    முல்லைப் பெரியாறு அணையைக் 'டி-கமிஷன்' (Decommission) செய்யக் கோரி, "சேவ் கேரளா பிரிகேட்" (Save Kerala Brigade) என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

    130 ஆண்டுகள் பழமையான அணை என்பதால் எந்த நேரத்திலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    அதேநேரம், "பழைய அணை எனும் பட்சத்தில், அதில் எந்த வகையான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்பதை நீங்கள் (மனுதாரர் தரப்பு) விளக்க வேண்டும்" என்று நீதிபதி சந்திரன் கேள்வி எழுப்பினார்.



  • Oct 13, 2025 13:34 IST

    அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல் அவிவ் வருகை

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று எகிப்தில் கையெழுத்தாக உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.



  • Oct 13, 2025 13:33 IST

    கரூர் துயர சம்பவம்: சட்டமன்றக் கூட்டத்தொடரில் நாளை இரங்கல்

    தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் கூடும் இந்தக் கூட்டத்தொடரில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.



  • Oct 13, 2025 13:30 IST

    ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடல்

    22 குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படும் 'கோல்ட்ரிப்' (Coldrip) இருமல் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் (Srisan Pharmaceuticals) நிறுவனத்தின் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அந்த ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தின் மீதும் விரிவான ஆய்வை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது



  • Oct 13, 2025 13:12 IST

    ஆம்னி நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்காவிடில் கடும் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

    பத்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் (Omni bus companies) பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்தக் கட்டணத்தைக் குறைக்கத் தவறினால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

     

     

     

     



  • Oct 13, 2025 13:10 IST

    16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக். 13) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Oct 13, 2025 13:09 IST

    ரங்கநாதனை நிறுவனத்திற்கே அழைத்து வந்து விசாரணை

    கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனை, மத்திய பிரதேச மாநில போலீசார் அவரது அலுவலகத்திற்கே அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

     

     

     



  • Oct 13, 2025 12:59 IST

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து  - அரசாணை வெளியீடு

    தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் முந்தைய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 13, 2025 12:51 IST

    தமிழைத்தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸிலும் நுழைந்த ஆயிஷா

    தமிழ் பிக் பாஸின் ஆறாவது சீசனில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆயிஷா , தற்போது தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ஷோ தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தற்போது நடந்து வருகிறது. தமிழை போலவே தெலுங்கிலும் தற்போது 9ம் சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிஷா ஐந்தாவது வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.



  • Oct 13, 2025 12:51 IST

    காங்கிரசில் இணைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி 

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் (வயது 39). இவர் தாத்ரா மற்றும் நகர் அவேலி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இவர் 2018ம் ஆண்டு கேரள வெள்ள மீட்பு பணியில் தன்னார்வலராக செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்றார்.

    இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணன் கோபிநாந்த் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சமூக ஆர்வலராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் இன்று காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் கோபிநாத் காங்கிரசில் இணைந்தார்.



  • Oct 13, 2025 12:22 IST

    சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - ராமதாஸ்

    சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சாதி அடையாள பெயர்களை நீக்குவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தமிழகத்தில் உள்ள பல சமூக மக்கள் இடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர். அவர்கள் நினைவாகவும், அவர்களை போற்றி நினைவு கூறும் வகையில் அவர்களின் பெயர் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் குல பெயர் உடன் முழுமையாக பெயரை கொண்டு அவர்கள் பெயர் அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூட்டப்பட்டது. அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடிய தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்கள் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் சமுதாய மற்றும் குல பெயர் உடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது. நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது.

    இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும் ஆங்காங்கே முரண்பாடுகள் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதேசமயம் ஒரு சமுதாயத்தின் பெயர் நீக்கப்படும் இடத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் பெயர்தான் சூட்டப்பட வேண்டும். அப்போது தான் அந்தப் பகுதி மக்களிடத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரும். இது அனைத்து சமுதாயப் பெயர்களுக்கும் பொருந்தும்.

    அந்தந்த பகுதி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் முழு பெயர்களை அந்தந்த பகுதியில் தான் சூட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைவுகளை அந்த பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள். அதை தவிர்த்து தன்னிச்சையாக அரசு நிர்வாகம் பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல.

    தமிழ்நாடு முழுக்க இப்படி சமூக அடையாள பெயர்களை அகற்ற நினைத்த தமிழக அரசு 9-ஆம் தேதி கோவையில் தமிழக முதல்வர் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு "ஜி.டி.நாயுடுவின்" பெயரினை வைத்துள்ளது அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. நாயுடு என்பது சாதிய பெயர் இல்லையா ? அப்படி எனில் தலைவர்களின் பெயருடன் வருகின்ற அவர் அடையாள பெயரும் சாதிய பெயர் அல்ல என கொள்ள வேண்டும்.

    சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது. சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும்.

    எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Oct 13, 2025 12:00 IST

    3-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் - அரசுக்கு ரூ. 10 கோடி வருவாய் இழப்பு

    இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 10 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Oct 13, 2025 11:52 IST

    சென்னையில் ஸ்ரேசன் ஃபார்மா மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை 

    சென்னையில் ஸ்ரேசன் ஃபார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், சோதனை நடந்து வருகிறது.



  • Oct 13, 2025 11:51 IST

    அடிக்கல் நாட்டிய ஸ்டாலின் 

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் 4 கோயில்களில் 4 புதிய திட்டப்பணிகள் மற்றும் உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.48 கோடி மதிப்பில் 7 கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள் மற்றும் இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வாளர் அலுவலகங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.



  • Oct 13, 2025 11:50 IST

    3-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் 

    இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Oct 13, 2025 11:29 IST

    அமெரிக்க பாரில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 20 பேர் காயம்!

    அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் செயின்ட் ஹெலினா தீவு பகுதியில் உணவு விடுதியுடன் கூடிய பார் ஒன்று உள்ளது. இதில், மதுபானங்களுடன் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும்.

    இந்த நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் பாரில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பியோடினார்கள். சம்பவம் நடந்தபோது, நூற்றுக்கணக்கானோர் அந்த பாரில் இருந்துள்ளனர். அவர்களில் பலர் அடைக்கலம் தேடி, அருகேயுள்ள கடைகளுக்குள்ளும், கட்டிடங்களுக்கு உள்ளேயும் புகுந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.



  • Oct 13, 2025 10:03 IST

    தங்கம் விலை சவரன் ரூ.200 உயர்வு!

    ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.92,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,525க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.195-க்கு விற்பனையாகிறது.



  • Oct 13, 2025 09:46 IST

    கல்வி சிறப்புரிமை ஆகிவிடக்கூடாது - ராகுல்

    கல்வி என்பது ஒரு சிலரின் சிறப்புரிமை ஆகிவிடக்கூடாது. கல்வி என்பது சுதந்திரத்தின் அடித்தளம் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்விமுறை இந்தியாவுக்கு தேவை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 



  • Oct 13, 2025 09:12 IST

    நிர்மல் குமாருக்கு அக்.24ம் தேதி வரை காவல்

    நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தெற்கு தவெக மாவட்ட செயலாளர் S.M.நிர்மல்குமாருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



  • Oct 13, 2025 09:07 IST

    வால்பாறையில் யானை தாக்கி சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சோகம்.

    வால்பாறை காடம்பாறை பகுதியில் வீட்டை உடைத்து யானை தாக்கியதில் பாட்டி,பேத்தி உயிரிழந்தனர்.  அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் நுழைந்த யானை அஞ்சலை, ஹேமா ஸ்ரீ ஆகியோரை தாக்கியுள்ளது.



  • Oct 13, 2025 08:42 IST

    சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை (அக்.14) கூடும் நிலையில் இன்று(அக்.13) சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 



  • Oct 13, 2025 08:34 IST

    அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

    சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் தீபா ஜோசப், அண்ணாநகரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்கத்துறை துறையினர் சோதனை மேற்கொண்டனர். இருமல் மருந்து  உட்கொண்ட 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • Oct 13, 2025 08:01 IST

    ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

    கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.  உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு சென்ற காரில் இருந்த மூவர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இறந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.



  • Oct 13, 2025 07:53 IST

    கரூர் துயரம் - தவெக வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்!

    கரூரில்   தவெக  தலைவர்   விஜயின்  பரப்புரை   கூட்டத்தில்   41   பேர்  உயிரிழந்த   விவகாரத்தில்  உயர்நீதிமன்றம்   அமைத்த   எஸ்..டிக்கு  தடை  கோரிய   வழக்கில்   இன்று  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.   உச்சநீதிமன்ற   முன்னாள்   நீதிபதி   மேற்பார்வையில்   எஸ்..டி   அல்லது   சிபிஐ  விசாரணை   வேண்டுமென  மனுதாரர்கள்  கோரி   இருந்தனர்.

     



news updates Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: