பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக் குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இந்தியாவிலேயே
காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை பெருநகர காவல்துறை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
சென்னை காவல்துறையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவ.25) தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில், "மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக் குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம்.
முறையாக பயிற்சி பெற்றுள்ள காவல்துறை இசைக் கலைஞர்கள், நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே உள்ள திறந்த வெளி அரங்கத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“