தமிழக அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் செய்தியாளர் ஒருவர், ரூ.1000 நிதியுதவி திட்டத்தின் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், “ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இருந்தது. தற்போது தேவை உள்ளோருக்கு ரூ.1000 கொடுக்கிறோம்.
ஆகவே இந்தத் திட்டத்தில் எழும் அனுமானங்களுக்கு பதில் சொல்ல இயலாது” என்றார். தொடர்ந்து, தகுதியிருந்தும் உதவித் தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்” என்றார்.
முன்னதாக, தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய பலரும் இணையதளத்தை ஒரே நேரத்தில் அணுகியதால், இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் தவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“